ராமநாதபுரம், ஜூலை 10: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் நேற்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அதேபோல் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தொமுசவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பிலிருந்து ஊர்வலமாகச் சென்று தலைமை அஞ்சலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.இங்கு மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர். பரமக்குடியில் மறியலில் ஈடுபட்ட 79 பேர், சிக்கலில் 158 பேர், திருவாடானையில் 54 பேர், முதுகுளத்தூரில் 78 பேர், கமுதியில் 49 பேர், சாயல்குடியில் 14 பேர் என மாவட்டம் முழுவதும் 185 பெண்கள் உள்ளிட்ட 574 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 600 பேரும், எல்ஐசி ஊழியர்கள் 15 பேரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.


