Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநகரில் 1,11,074 எண்ணிக்கையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

கோவை, ஏப். 18: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை சக்திசுகர்ஸ் அருகே தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் இம்முகாமை துவக்கி வைத்தார். இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடவேண்டியது அவசியமாகிறது. அதற்காக இம்முகாம் துவக்கப்பட்டுள்ளது. தெருநாய்களில் அதிகமாக பரவும் ரேபிஸ் என்னும் மரணமளிக்கும் வைரஸ் நோய் பரவலை தடுக்க இம்முகாம் உதவும். மாநகராட்சி எல்லைகளுக்குள் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்படும். இது, மாநகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சி ஆகும்.

இம்முகாம், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 1,11,074 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், 2 தடுப்பூசி வாகனங்கள் மற்றும் 4 கருத்தடை மையங்கள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வாகனமும் தினமும் 200 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திறன் கொண்டது. தடுப்பூசி வாகனங்்கள் மூலம் தினமும் 400 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை மையங்கள் மூலம் மாதம்தோறும் சுமார் 1,500 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மத்திய மண்டலத்தில் 11,017 தெருநாய், கிழக்கு மண்டலத்தில் 24,404 தெருநாய், மேற்கு மண்டலத்தில் 22,085 தெருநாய், வடக்கு மண்டலத்தில் 22,069 தெருநாய், தெற்கு மண்டலத்தில் 31,499 தெருநாய் ஆகியவற்றுக்கு 2 முதல் 3 மாதங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

இது, ரேபிஸ் நோய் பரவலை முற்றிலும் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நடந்த முகாமில், துணை மேயர் வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி, மாநகராட்சி பூங்கா கால்நடை மருத்துவர் சரவணன், கவுன்சிலர்கள் முனியம்மாள், சுமா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஜெயபார்வதி, ரேஸ்கோர்ஸ் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் காமினி மற்றும் பலர் பங்கேற்றனர்.