Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநகராட்சி பரப்பளவு விரிவாக்கம்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ‘வார்டு எண்’ குளறுபடிக்கு தீர்வு: இன்று முதல் சரியாக வழங்க நடவடிக்கை

மதுரை, மே 29: மதுரை மாநகராட்சி பகுதிகளின் விரிவாக்கம் நடைபெற்று 14 ஆண்டுகள் வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் நீடித்த ‘வார்டு எண்’ குளறுபடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் பிறப்புச் சான்றிதழ்களில் அவர்களது வீடு இருக்கும் வார்டு எண் குறிப்பிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை நகராட்சி 1971ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 72 வார்டுகள், 4 மண்டலங்களாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என 3 நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி என 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, இதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சி வார்களின் எண்ணிக்கை 72ல் இருந்து 100ஆகவும், மண்டலங்களின் எண்ணிக்கை 4ல் இருந்து 5 ஆகவும் உயர்ந்தது. இதன் அடிப்படையில் வார்டு பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, அவற்றுக்கான எண்கள் மாற்றப்பட்டன.

இதனால் விரிவாக்கத்திற்கு முன் இருந்த பல வார்டுகளின் எண்கள் வேறாக மாறியது. இந்த வார்டு மறுசீரமைப்பு, மாநராட்சியின் அனைத்து துறை ஆன்லைன் சாப்ட்வேர்களிலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் நகர்நல பிரிவின் ஆன்லைன் சாப்ட்வேரில் இந்த மறுசீரமைப்பு பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் பழைய 72 வார்டுகள் அடிப்படையிலே தற்போது வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு பகுதியில் பிறக்கும் குழந்தையின் முகவரி அடிப்படையில் பழைய வார்டு எண் குறிப்பிடப்பட்டன. ஆனால் அந்த முகவரி தற்போது வேறு வார்டு எண்ணில் இருந்ததால், பெரும் குளறுபடி ஏற்பட்டது.

இந்நிலையில் வார்டுகள் மறுசீரமைப்பு நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நகர்நல பிரிவின் ஆன்லைன் சாப்ட்வேரில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று (மே 29) முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் பிறப்புச்சான்றிதழில், அதன் முகவரி இருக்கும் வார்டு எண் சரியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் இந்திரா மேற்பார்வையில், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் தலைமையில் புள்ளியியல் நிபுணர், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இதற்கான பணிகளை முடித்துள்ளனர். இதனால் இன்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெற்றோர் வசிக்கும் வார்டு எண்கள் சரியாக குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.