Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாள்: வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு

சேலம், ஏப்.29: சேலம் மாநகராட்சியில் நடப்பு ஆண்டிற்கான சொத்து வரி செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை (30ம் தேதி) கடைசி நாளாகும். இது குறித்து வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த நிதியாண்டில் சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, நிறுவன வரி உள்பட பல்வேறு வரிகள் ரூ.165 கோடி வசூல் செய்யப்பட்டது. இதில் 60 சதவீதம் சொத்துவரி வசூல் ஆகியுள்ளது. 60ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர். ரூ.175 கோடி சொத்து வரி நிலுவையில் உள்ளது.

இதனை வசூலிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டத்தின்படி, சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை, நாளைக்குள் (30ம் தேதி) செலுத்தும் பட்சத்தில் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ₹5,000 வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை நாளைக்குள் (30ம் தேதி) செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ₹5,000 வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக 4 மண்டலங்களிலும் சொத்து வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கு வரி நிலுவை குறித்தும், நடப்பு ஆண்டிற்கான வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்க தொகை பெறுவது குறித்தும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 4மண்டல அலுவலகங்களிலும், வரி வசூல் மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரமும் ரூ.10கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தங்களது சொத்து வரியினை வரும் 30ம்தேதிக்குள் (நாளை) செலுத்தினால் 5 சதவீதம் ஊக்க தொகை அல்லது ₹5 ஆயிரம் வரை பெறலாம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக 24 மணி ேநரமும் செலுத்தலாம். ஊக்க தொகை பெறுவது தொடர்பாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் அளித்து வருகிறோம். கடந்த 25 நாட்களில் ரூ.25 கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளது,’ என்றனர்.