மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சாலை குறுக்கே வைக்கப்படும் இரும்பு தடுப்புகளால் நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு, மே 22: மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வைக்கப்படும் இரும்பு தடுப்புகளால் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு நசியனூர் ரோட்டில், க்கு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரோட்டின் குறுக்கே போக்குவரத்து காவல்துறை சார்பில் 2 இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. மேலும் அந்த தடுப்புகள் லாரி, பஸ் போன்ற கன ரக வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக வைக்கப்பட்டதால் ஓட்டுநர்கள் இறங்கிச் சென்று அவற்றை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அதன்பின்னர் வாகனங்களை ஓட்டிச் செல்லும் அளவுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக தற்போது இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் சாலை அகலமாக இருப்பதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலோ, வேறு சிக்கல்களோ எதுவும் இதுவரை ஏற்பட்டதில்லை.
இந்நிலையில், திடீரென அந்த இடத்தில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்லும் எடை நிலையம், ஹார்டுவேர் கடைகள், மருத்துவமனை போன்றவை இருப்பதால் இந்த தடுப்புகளால், கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் செல்வதில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நசியனூர் ரோட்டில் இப்போது புதிதாக வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளில் தொடங்கி சுமார் அரை கிமீ தூரத்துக்குள் உள்ள நல்லி தோட்டம் பிரிவு, அதையடுத்து 100 மீ. தொலைவிலேயே மேலும் ஒரு தடுப்பு, அதன் பின் சுமார் 200 மீட்டர் தூரத்திலேயே உள்ள வெட்டுக்காட்டுவலசு, பஸ் நிறுத்தம் அருகில் ஒரு தடுப்பு என சுமார் 1 கிமீ தூரத்துக்குள் 4 இடங்களில் சாலைகளின் நடுவில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரும்புத் தடுப்புகளால், போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகளுக்கு சிரமம் தான் ஏற்படுகிறது. அதே நேரம் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள வியாபார நிறுவனங்களுக்கு வாகனம் நிறுத்திக்கொள்ள இடவசதி ஏற்படுகிறதே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். ஒருவேளை இந்த இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மிகவும் அத்தியாவசியம் என்றால் இரும்புத் தடுப்புகள் வைத்து சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைகாட்டி வலசு பிரிவில் வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தியதை போல தற்போது இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், அவற்றை அகற்றிவிட்டு வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


