சிதம்பரம், மார்ச் 19: மருத்துவமனைக்கு சென்ற போது பட்டப்பகலில் சாப்ட்வேர் கம்பெனி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை சித்தன் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கஜேந்திரன்(35). இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சாப்ட்வேர் கம்பெனியில் அப்ளிகேஷன் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தன்னுடைய கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது வீட்டை பூட்டி விட்டு, மனைவி மற்றும் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் குழந்தையை காண்பித்து விட்டு, மீண்டும் காலை 10:30 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அறையில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது.
மருத்துவமனைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.