Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை வரும் சுற்றுலா பயணிகள் ஆன்மிகத்துடன், உணவு, பழமைக்கும் முக்கியத்துவம்

மதுரை, மே 20: மதுரையை தேடி வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்மிக கலாச்சாரத்துடன், பாரம்பரிய இடங்களுடன், உணவு வகைகளை தேடியும் சுற்றுலாவாசிகள் வருகை இருக்கிறது. மனதை இதமாக்கி மகிழ்ச்சி நிறைக்கும் மந்திரத்தை ‘சுற்றுலா’ மறைத்து வைத்திருக்கிறது. இந்த உன்னத உலாவிற்குள் அறிவை விசாலமாக்கும் அற்புத வலிமை உறைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை தேடி வெளிநாட்டினர் வருகை இருக்கிறது. இதில் மதுரைக்கான சுற்றுலாவாசிகள் வருகை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய பயணத்தலங்களில் ஒன்றாக சுற்றுலாவாசிகளிடம் மதுரை மாறியுள்ளது. மதுரைக்கு கடந்த 2023ம் ஆண்டில் 57,564 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை, 2024ல் 98,770 ஆக அதிகரித்துள்ளது.

 மதுரை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறும்போது, ‘மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள், திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் உள்ளிட்ட பகுதிகளை தேடி வெளிநாட்டினர் வருகை உள்ளது. தற்போது மேலும் பல எதிர்பார்ப்புகளுடன் இவர்கள் வருகை இருக்கிறது. முன்பு பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கோயில்கள், சுற்றுலா பகுதிகளுக்கு மட்டுமே சென்று திரும்பினர். இப்போது பலரும் வரலாற்று நடை பயணங்கள், பழைய சந்தைகள், பாரம்பரிய கலைஞர்கள், அவர்களது கலைகள் மற்றும் கீழடி போன்ற தொல்பொருள் தளங்களை தேடிச் செல்கின்றனர். மதுரை செல்லூர் தறிக்கூடத்தில் நூல் துணியாவது, களத்துப் பொட்டலில் எண்ணெய் மரச் செக்குகள், தத்தனேரி சுடுகாடு, ஆழ்வார்புரம் மூங்கில் கடைகள், கீழமாசி வீதி மளிகைக் கடைகள், காய்கறி, பூ மார்க்கெட்டுகள், வைகை ஆற்று சலவைக் கூடம், பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகள் என ஒவ்வொன்றையும், வெளிநாடுகளில் இருந்து வரும் பலரும் ரசித்து பார்க்கின்றனர். உள்ளூர் ரிக்ஷாக்களில் மதுரையை வலம் வருவது இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்றார்.

சுற்றுலாவாசிகளில் பலரும் மதுரைக்கான பழமையான சுவைமிக்க உள்ளூர் உணவுக்கடைகளை தேடுகின்றனர். பன் புரோட்டா, கறி தோசை, மட்டன் பிரியாணி துவங்கி ஜிகர்தண்டா, ரோஸ்மில்க் வரை உணவுகளை ருசிப்பதில் அவர்களிடம் ஆர்வம் அதிகமிருக்கிறது. உள்ளூர்வாசிகள் செல்லும் இடங்களுக்கே தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர் சுற்றுலா பயணிகள். சுற்றுலா பயணிகளால் மதுரை ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் மக்கள் கூட்டத்தை மதுரைக்குள் அதிகம் காண முடிகிறது. உள்ளூர் வாசிகளுடன், வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினர் என அத்தனை தரப்பினரிடமும் சுற்றுலாவிற்கான செலவினங்களில் அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மதுரைக்கு ஐரோப்பியர்கள் வருகை அதிகமிருக்கிறது. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டினருடன் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மதுரையை தேடி வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறமிருக்க, மதுரையை மையமாக வைத்து சுற்றுப்பகுதிகளுக்கு பயணித்து திரும்புவதை சுற்றுலா பயணிகள் தகுந்த வசதியாக கருதுகின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம், காரைக்குடி, கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திரும்பும் மையப் பகுதியாக மதுரையில் தங்கிச் செல்வதில் விருப்பம் அதிகமிருக்கிறது. சாலை போக்குவரத்துடன், ரயில்கள் இணைப்பும் இவர்களுக்கான இந்த வசதிகளை தருகிறது. மதுரை சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஆண்டின் ஜனவரி மற்றும் மே மாதங்களில் பெரும் எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கென சுற்றுலாத்துறை ஜல்லிக்கட்டு, பொங்கல் விழாக்களுடன், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், மதுரையின் தொன்மை கிராமங்களுக்கும் வெளிநாட்டினரை அழைத்துச் சென்று, நமது கலாச்சார கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதற்கென வரவேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதுதவிர, வெளிமாநிலங்களின் சுற்றுலா பயணிகள் ஆண்டின் அத்தனை காலங்களிலும் மதுரைக்கு வந்து திரும்புவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். இதுதவிர, உள்ளூர் சுற்றுலாவாசிகள் பயனடையும் வகையில் ஒருநாள் சுற்றுலா ஏற்பாடுகளையும் சுற்றுலாத்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது’ என்றார்.