Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலம் தோண்டி எடுப்பு: சக நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலத்தை தோண்டி எடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (52), கேட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (27). சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் கடந்த 11ம் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் விக்னேஷ் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கராஜ் கடந்த 15ம் தேதி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் காணாமல் போன்ற விக்னேஷை தீவிரமாக தேடிவந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ் மறைமலைநகர் அருகே கோகுலாபுரம் ஏரியில் தனது நண்பர்களான கோகுலாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விசு (23), கீழக்கரணை பிள்ளையார் கோயில் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கோஷ் குமார் (24) மற்றும் கோகுலாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கோகுலாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த விசு, தில்கோஷ் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரைப் நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்தனர். மேலும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் விக்னேஷை வெட்டிக் கொலை செய்து கோகுலாபுரம் ஏரியில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதில், விசு மீது செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் நேற்று கோகுலாபுரம் ஏரிக்கு விரைந்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விசு, தில்கோஷ் குமார் ஆகியோர் விக்னேஷின் உடல் புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் விக்னேஷின் உடல் தோண்டி எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனை அறிந்த விக்னேஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோகுலாபுரம் ஏரியில் திரண்டனர். இதையடுத்து, அப்பகுதி போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ குழுவினர் விக்னேஷ் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். குற்றவாளிகளை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை வழிமறித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நண்பர்களே மது வாங்கிக் கொடுத்து மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.