'
கரூர், ஜூலை 8: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகளவு காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக காரணமாக குறைவான மக்களே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், வயதான முதியோர், பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் வருகை தந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவருகின்றனர்.
அதனால் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும். முக்கிய பண்டிகை நாட்களையொட்டி அந்த வாரத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு குறைவான மக்களே வருவதால் ஆட்சியர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் தொடங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கோயில் திருவிழாக்கள் மற்றும் கடந்த ஒரு மாதமாக வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாகவும் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. அதேபோல் நேற்று (திங்கட்கிழமை) கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழக்கத்தை விட குறைவான மக்களே வந்திருந்தனர். இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரித்தபோது, கரூர் மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் புழுதியை வாரிகொட்டும் பலத்த காற்று காரணமாக மக்கள் வெளியில் வருவதற்கு பயந்து வீடுகளில் முடங்கியதாக கூறப்படுகிறது.


