Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

“மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழா; பொதுமக்கள் மனுக்கள் 30 நாட்களில் நிறைவேற்றப்படும்: மயிலாடுதுறை கலெக்டர் பேச்சு

செம்பனார்கோயில், ஜூலை 12: மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று மயிலாடுதுறை கலெக்டர் மகாபாராதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதன்படி, இத்திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன் முதலாக செம்பனார்கோயிலில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசும்போது கூறியதாவது: அரசின் சேவைகளை மேம்படுத்தவும் பொதுமக்களுக்கு அவற்றை விரைவாக கொண்டு சேர்க்கவும் “மக்களுடன் முதல்வர்” திட்டம் நகர்புறப் பகுதிகளில் கடந்த 2023 டிசம்பர் மற்றும் 2024 ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தினை ஊரக பகுதிகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் (நகராட்சி மற்றும் பேரூராட்சி) 20 முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பெறப்பட்ட 3052 மனுக்களில் 2693 மனுக்கள் ஏற்கப்பட்டு, 359 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. மேலும் 7614 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 6683 மனுக்கள் ஏற்கப்பட்டு 931 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டாரங்களில், மொத்தமாக 241 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை உள்ளடக்கி 11.7.2024 முதல் 20.8.2024 வரை 15 நாட்களில் 43 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இன்றைய முகாமில் செம்பனார்கோயில், ஆறுபாதி, மாத்தூர், முக்கரும்பூர், திருச்சம்பள்ளி, காளஹஸ்தினாபுரம் மற்றும் முடிகண்டநல்லூர் ஆகிய 7 கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் மின்சார வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்படி, முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் கோரிக்கைகளில், இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு, உடனடியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில், கூடுதல் கலெக்டர் ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் துளசிரேகா, வெண்ணிலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.