Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலீஸ் எனக்கூறி மிரட்டி மாமூல் வசூலித்த தீயணைப்பு படை வீரர்: பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்

ஆரணி, ஜூன் 23: ஆரணி இரும்பேடு கூட்ரோட்டில் மதுபோதையில் ேபாலீஸ் எனக்கூறி மிரட்டி மாமூல் வசூலித்த தீயணைப்பு வீரரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோட்டில் இரவு நேரங்களில் சிக்கன் பக்கோடா கடை, பானிபூரி, டிபன் கடைகள் உள்ளிட்ட தள்ளுவண்டி கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காக்கி நிற பேண்ட், டீசர்ட் அணிந்தபடி பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், தான் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாக கூறி கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டுள்ளார். மேலும் சில கடைகளில் பொருட்களை இலவசமாக கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனை நம்பிய சில கடைக்காரர்கள் ரூ.50 முதல் ரூ.500 வரை கொடுத்துள்ளனர்.

மேலும் சில கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உபயோகிப்பதாக கூறியும், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக கூறியும் மிரட்டி வந்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பல கடைக்காரர்கள் மாமூல் தர மறுத்துள்ளனர். பின்னர் வியாபாரிகள், அப்பகுதி இளைஞர்கள் திரண்டு அவரை பிடித்து ஐடி கார்டு கேட்டனர். அவர் தர மறுத்ததால் அவர் மோசடி ஆசாமி என நினைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த், தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன்(50) என்பதும், திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் பயர்மேனாக வேலை செய்து வருவதும், மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாகவே, போலீஸ் எனக்கூறி இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வாரத்திற்கு 2 முறை கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பைக்குடன் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.