Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறுவேன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி வேலூரில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

வேலூர், ஜூலை 3: வேலூரில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறுவேன்’ என்று கூறினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் திமுக இளைஞர் அணி சார்பில், ஒரு சமூக ஊடக வலைதள பயிற்சியாளரை மண்டல வாரியாக திமுக இளைஞரணி செயலாளரும், துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கான நேர்காணல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள அனுகுலாஸ் ஒட்டலில் நேற்று நடந்தது. திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார்.

தொடர்ந்து வேலூர் பேபி மஹாலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுடன் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ‘வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என தலைவர் கூறியுள்ளார். ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியினர் உழைக்க வேண்டும்.ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை மூலம் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக இரண்டு குழந்தைகளுக்கு பெயர் வைத்த துணை முதல்வர் ஒரு குழந்தைக்கு கிருத்திகா என்றும் இன்னொரு குழந்தைக்கு தாயக அரசு எனவும் பெயர் வைத்தார்.

வேலூரில் நடைபெற்ற இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு, ‘எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும் அவர் முடிவு எடுப்பார் என்றார். காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன்’ என்றார். கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரவிக்குமார் வேல் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, எம்பி கதிர்ஆனந்த், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், எம்எல்ஏ அமலுவிஜயன் எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், பகுதிசெயலாளர்கள் கணேஷ்சங்கர், சுந்தரவிஜி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.