பொதுமக்களிடம் மென்மையோடும், கனிவாகவும் பேச வேண்டும் 2ம் நிலை பெண் காவலர்களுக்கு ஐஜி அறிவுரை வேலூர் கோட்டையில் பயிற்சி நிறைவு விழா
வேலூர், ஜூலை 9: நம்மை நம்பி வரும் பொதுமக்களிடம் மென்மையோடும் கனிவாகவும் பேச வேண்டும் என வேலூர் கோட்டை காவலர் பயிற்சி நிறைவு விழாவில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கு ஐஜி அறிவுரை வழங்கினார்.
வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 182 2ம் நிலை பெண் காவலர்களுக்கான 7 மாத பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பயிற்சி பள்ளி தலைவர் (பொறுப்பு) விநாயகம் தலைமை தாங்கினார். வேலூர் எஸ்பி மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு கலந்து கொண்டு, பெண் போலீசாரின் அணி வகுப்பு பார்வையிட்டு, சிறப்பாக பயிற்சி முடித்த பெண் போலீசாருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பேசியதாவது: வேலூரில் உள்ள இப்பயிற்சி பள்ளி மிகவும் பாரம்பரியமான பயிற்சி பள்ளியாகும். நான் கடந்த 2010-2011-ம் ஆண்டு வேலூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய போது, இந்த பயிற்சியை பார்வையிட்டுள்ளேன். இங்கு தற்போது 182 பேர் பயிற்சி முடித்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு ஆயுதப்படையில் பணியாற்ற உள்ளனர்.
உங்களது மிடுக்கான அணிவகுப்பு பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை பார்த்த பெற்றோர் மெய் மறந்து விட்டனர். வீட்டில் கரப்பான் பூச்சியை பார்த்து பயந்த நமது பிள்ளைகள் இங்கு துப்பாக்கியை பிடித்து பயிற்சி செய்வதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் சமூக அர்ப்பணிப்போடு காவல்துறையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். உங்களால் மேலும் காவல்துறைக்கு பெருமை வருகிறது. உங்களது பணி சிறக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் உங்களது சிறிய சேவைகள் கூட காவல்துறைக்கு பெரிய மதிப்பு கிடைக்கும். அதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். முன்பு போல் தற்போது இல்லை. நாம் தான் குற்றவாளிகளை கண்காணித்து வந்தோம். சமூகத்தின் பார்வையும் நம் மீது உள்ளது என்ற கவனம் வேண்டும். எனவே நம்மை நம்பி வரும் பொதுமக்களிடம் மென்மையோடும் கனிவாகவும் பேச வேண்டும். அதுதான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.