ஆரணி, மார்ச் 18: ஆரணி டவுன் சாந்தா தெருவை சேர்ந்தவர் கரிமா (எ) விக்னேஷ்(26). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவரை, முன்விரோதம் காரணமாக ஆரணி டவுன் புதுக்காமூர் பகுதியில் நேற்று முன்தினம் 9 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது. இந்த வழக்கில் தனபால்(25), பிரசாந்த்(31), அசோக்குமார்(34), ஆடு (எ) தினேஷ்குமார்(26), தாமு(எ)தாமோதரன்(24), கமல்(34), சந்தோஷ் குமார்(23), ஆகிய 7 பேரையும் ஆரணி டவுன் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய வக்கீல் கணேஷ், அவரது தம்பி ரமேஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பெரணமல்லூர் பகுதியில் ரமேஷ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம், எஸ்ஐ சுந்தரேசன் தலைமையிலான போலீசார் ரமேஷின் செல்போன் லொக்கேஷனை வைத்து, பெரணமல்லூரில் பகுதியில் மடக்கி பிடித்து, நேற்று கைது செய்தனர். பின்னர் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது அண்ணன் வக்கீல் கணேஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.