Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்ணிடம் ₹3 லட்சம், 3 சவரன் நகை மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி

வேலூர், ஜூலை 16: தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ₹3 லட்சம் மற்றும் 3 சவரன் நகையை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டை சேர்ந்தவர் விஜயா(55). இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். மகளிர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளேன். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாங்கள் செய்யும் தொழிலுக்கு முதலீடு இல்லை எனக்கூறிஎன்னிடம் கடனாக ₹3 லட்சம் மற்றும் 3 பவுன் நகை ஆகியவற்றை வாங்கினர். ஆனால் எனக்கு தர வேண்டிய லாபத்தொகையை தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டேன். இதுகுறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தேன். ஊர் பெரியவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாசம் 19ம்தேதி அழைத்து பேசினர். அப்போது அவர்கள் பணம், நகையை திருப்பிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் தரவில்லை.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை தாக்க வருகின்றனர். எனது பணத்தையும் நகையும் மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வேலூர் கொணவட்டம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த கற்பகம் என்பவர் அளித்துள்ள மனுவில், எனக்கும் எனது கணவருக்கும் கலப்பு திருமணம் நடந்தது. நான் மாற்று சமூகம் என்பதால் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்தனர். இதற்கு காரணம் எனது கணவரின் தாய் மற்றும் அண்ணன். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் கணவரை என்னுடன் சேர்த்து வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வேலூர் மூஞ்சூர்பட்டு பகுதியைச்சேர்ந்த சந்தியா என்பவர் அளித்த மனுவில், எனது வீட்டில் கடந்த ஆண்டு ஜூலை 26ம்தேதி இரவு நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் எப்ஐஆர் போட்டனர். ஆனால் ஒரு ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது நகை மற்றும் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.