Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி, ஜூன் 8: பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் இம்மாதம் 7, 11, 12, 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி சிறப்பு முகாம் 6 நாட்கள் நடைபெறுகிறது. பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட பூந்தமல்லி, திருவேற்காடு, திருமழிசை, நேமம், வயலாநல்லூர், வானகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, ஆதரவற்ற விதவை சான்று, இலவச வீட்டு மனை பட்டா, சான்றிதழ்களில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். இந்நிலையில், ஜமாபந்தி நிகழ்ச்சிக்கான தொடக்க விழா பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய் தீர்வாய அதிகாரியும், மாவட்ட வழங்கல் அலுவலருமான கண்ணன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஜமாபந்தியை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

பின்னர், மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் சங்கர், பூந்தமல்லி மண்டல துணை வட்டாட்சியர் அருள்குமார், வானகரம் மண்டல துணை வட்டாட்சியர் பெருமாள், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் யுகேந்தர், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜய் ஆனந்த், திமுக நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் க.தர், வெள்ளவேடு ஊராட்சி மன்ற தலைவர் துர்கா கோபிநாத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட வழங்க அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

47 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு மனு

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருவள்ளூர் வட்டம், 74 பெரியகுப்பம் கிராமம், சர்வே எண்.1 ல் உள்ள திருவள்ளூர் நகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பத்தியால்பேட்டை, வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தில் 47 குடும்பத்தினர்கள் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த, வறுமை கோட்டின் கீழ் வசித்து வருகிறார்கள். மேலும் அவர்களிடம் குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது, பீம் ரசீது, குடிநீர் வரி ரசீது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்கட்டண அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. தமிழக அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டி பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகத்திடம் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் கோரிக்கை மனுவை அளித்தார். இதில் வட்டாட்சியர் செ.வாசுதேவன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன் 12வது வார்டு உறுப்பினர் தாமஸ் (எ) ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் மனு

பொன்னேரியில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் சோழவரம் உள்வட்டத்திற்குட்பட்ட, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம் கலந்து கொண்டு பொதுமக்கள் சார்பில் மனு அளித்தார். அதில், ஆத்தூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரியும், குடிநீர் பிரச்னை தீர்க்கவும், விவசாயிகளின் நீர் பிரச்னை தீர்க்கவும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திடவும், பராமரிப்பு இல்லாத மாடுகளை அடைக்க பவுண்டு அமைக்கவும், சாலை மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.