Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரி உளவாய்க்கால் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் சுற்றிவளைப்பு கனரக லாரி, கார் பறிமுதல்

வானூர், மே 10: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய நுண்ணறிவு காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார், வானூர் அருகே பூத்துறையில் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு வந்த கனரக லாரி மற்றும் காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது கனரக லாரியில் போலி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரி மற்றும் காரில் இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்த போலீசார், மதுபானம் கடத்தி வரப்பட்ட கனரக லாரி, காருடன் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிரடியாக விசாரித்தனர். அதில், மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், திருச்சியைச் சேர்ந்த கருத்த பாண்டி, புதுவையைச் சேர்ந்த பால்ஜோஸ், ராமநாதபுரத்தை சேர்ந்த சித்திக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குபதிந்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கனரக லாரி மற்றும் காரையும் கைப்பற்றினர். பின்னர் அனைவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் புதுச்சேரி பகுதியில் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி புதுச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் போலி மதுபாட்டில் தயாரிக்கப்பட்ட இடங்களை இருமாநில போலீசாரும் நேற்று பிற்பகல் கண்டறிந்தனர். இதையடுத்து புதுவை மற்றும் தமிழக போலீசார், கலால் துறையினர் உதவியுடன் புதுவை வில்லியனூர் அருகிலுள்ள உளவாய்க்கால் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் குடோன் என்ற பெயரில் இரவு நேரங்களில் போலி மதுபாட்டில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இக்குடோன் புதுவை அமைச்சர் ஒருவரின் மகளுக்கு சொந்தமான குடோன் என்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன் சித்திக் என்பவர் தனது ஆவணங்களை காண்பித்து பக்கத்து ஊர்தான் என்று கூறி குடோனை வாடகைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதும் தெரியவந்தது.

பிறகு இரவு நேரங்களில் பக்கத்து கம்பெனியில் யாரும் இல்லாத நேரத்தில் சாராயத்தை எடுத்து வந்து போலி மதுபாட்டில் தயாரித்ததும் தெரிந்தது. இதையடுத்து குடோனில் இருந்த போலி மதுபாட்டில், போலி ஹாலோ கிராம், சீல் அடிக்கும் இயந்திரம், 40க்கும் மேற்பட்ட 40 லிட்டர் கேன்களில் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் லோடு கேரியர் வாகனம் உள்ளிட்டவற்றை தமிழக போலீசார் பறிமுதல் செய்தனர்.