Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்ட அரசு விடுதிகளில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவ, மாணவியர் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு: மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் 44 மாணவர்களுக்கானது, 18 மாணவிகளுக்கானது. கல்லூரி, ஐடிஐ விடுதிகள் 8 மாணவர்களுக்கானது, 6 மாணவிகளுக்கானது ஆகும். பள்ளி விடுதிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர், கல்லூரி, ஐடிஐ விடுதிகள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும், உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர், மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள், பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 18க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை ஜூலை 15க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படும், அவர்களது படிப்பு முடியும் வரை, விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படும். எனவே, மாணவ, மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.