Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு

சென்னை, நவ. 5: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றி விட்டு, வேறு இடத்தில் புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத் துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது எனவும் சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரானது. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.