கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே தென்கைலாயம் என அழைக்கப்படும் பர்வத மலையில் ஓம் நமச்சிவாயம் என்ற கோஷத்துடன் சிவபக்தர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்ற நிலை மாறி தற்போது தினமும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது.