Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரதம மந்திரி கவுரவ நிதிபெற விவசாயிகள் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், மே 20: பிரதம மந்திரியின் கவுரவ நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் கட்டண வங்கியினையும் அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.இத்திட்டத்தின்கீழ் 20-வது தவனை நிதி வருகிற ஜீன் மாதம் விடுவிக்கப்பட உள்ள நிலையில் தகுதியுடைய விவசாயிகள் வேளாண்மைதுறை அலுவலர்களை தொடர்புகொண்டு தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது, நில உடைமைகளை பதிவேற்றம் செய்து கொள்வது மற்றும் அனைத்து விதமான பி.எம்.கிசான் தொடர்பான விவரங்களை சரிசெய்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் இதுவரை சேர்ந்து பயனடையாத விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளும் ஏற்கனவே பதிவு செய்து பயன்பெற்று பல்வேறு காரணங்களால் தற்போது நிதி உதவி நிறுத்தப்பட்ட பயனாளிகளுக்கும் இந்த முகாமிற்கு வந்து பயனடையலாம். மேலும், இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த விவசாயி மரணமடைந்திருந்தால், அவர்களது தகுதியுடைய வாரிசு உரிய ஆவணங்களை சமர்பித்து, தங்களது பெயருக்கு இத்திட்டத்தில் புதியதாக பதிவு செய்து பயனடையலாம். இறந்த பயனாளிகளின் விவரங்களை சமர்ப்பிக்காமல், இறந்த பிறகும் தொடர்ந்து தவணைத்தொகை பெறப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வரும் பட்சத்தில் தவறுதலாக பெறப்பட்டத்தொகை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

எனவே, இறந்த பயனாளியின் இறப்பு சான்றினை சமர்பித்து, அவர் பெற்று வரும் நிதியினை நிறுத்தவும், உரிய ஆவணங்களை சமர்பித்து வாரிசுதாரர் புதிதாக பதிவுசெய்து இத்திட்டத்தில் பயனடையவும் அறிவுறுத்தப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமையை பதிவு செய்தால் தான் ஜீன் மாதம் வழங்கப்படவுள்ள 20-வது தவணை நிதி பெற இயலும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை நில உடமைப்பதிவு செய்யாத பி.எம்.கிசான் 15179 பயனாளிகளும் இந்த முகாமில் கலந்துக்கொண்டு பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பி.எம்.கிசான் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் இந்த முகாமில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைய வழிவகை செய்யப்படும் என்பதால் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.