கேடிசி நகர், ஏப். 6: பாவூர்சத்திரம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலை மாடன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (20), கணேசன் மகன் மூர்த்தி (23), பேச்சி மகன் ஆனந்த் (27). இவர்கள் 3 பேரும் புல்லுக்காட்டுவலசை கோயில் கொடை விழாவுக்காக தங்கள் நண்பரான சுரண்டை அருகே ஊத்துமலையை சேர்ந்த மாரியப்பன் மகன் ராமர் (23) என்பவரை அழைத்துக் கொண்டு 2 பைக்குகளில் புல்லுக்காட்டுவலசைக்கு கடந்த 30ம் தேதி நள்ளிரவு புறப்பட்டனர். பாவூர்சத்திரம் அருகே தென்காசி- நெல்லை நெடுஞ்சாலையில் கேடிசி நகர் பகுதியில் 2 பைக்குகளும் சென்றபோது எதிரே வந்த பாவூர்சத்திரம், மேலப்பாவூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் (30) என்பவரது பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். ராஜா, மூர்த்தி, ஆனந்த், ராமர் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆனந்தும் உயிரிழந்தார். ராஜா, மூர்த்திக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


