Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளிகளில் மாவட்ட கலெக்டர்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

பெரம்பலூர்,ஜூன். 2: பள்ளிகளில் மாவட்ட கலெக்டர்கள், உயர் அலுவலர்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழ் நாடு பட்டதாரி - முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள். இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவரான மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் சுந்தர மூர்த்தி, மாநிலப் பொருளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நோக்கோடு நகர்ந்து கொண்டிருக்கும் கல்வித் துறையில், மாணவர்களின் திறன் வளர்ச்சி உள்ளிட்ட கல்வித் துறையின் வளர்ச்சிகள் குறித்து, துறை அலுவலர்கள், குறிப்பாக மாவட்டக் கலெக்டர்கள் சமீப காலமாக ஆய்வுகள் மேற்கொள்வதென்பது கடுமையான போக்குடையதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் மூலம் நாங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள கூடாது என்று எண்ணுவதாக கருதக் கூடாது.

சம காலத்தில் மாணவர்களது ஒழுங்கீன செயல்பாடுகள் குறித்து ஊடங்கங்கள் வாயிலாகவும், தமது அனுபவங்கள் வாயிலாகவும் நாட்டு மக்கள் நன்கு அறிவர். கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் சார்ந்து ஏறத்தாழ 400 குற்ற செயல்கள் நிகழ்ந்துள்ளது, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் போதைப் பொருட்கள் நுகர்வு கலாச் சாரம் அதிகரித்துள்ளது என்பதாக அறிய வருகிறோம். கள யதார்த்தமென்பது இதை விடவும் கூடுதல் சிக்கலாக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர்கள் கற்றல் - கற்பித்தல் பணியினை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர் என்பதை பாராட்ட வேண்டிய வேளையில், பாராட்ட மனமின்றி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் போன்று சில மாவட்டக் கலெக்டர்கள் பொதுத் தேர்வு முடிவுகளுக்காகவும், தேர்ச்சி விழுக்காட்டிற்காகவும் தேர்ச்சி ஒன்றே பிரதானம் என்பதாக ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதமானது கண்டிப்பல்ல, முரட்டு தனமானது.

ஆதலால் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுகிறோம் என தமிழ் நாடு பட்டதாரி - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரான மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் சுந்தர மூர்த்தி,மாநிலப் பொருளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.