கூடுவாஞ்சேரி, ஜூலை.14: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் முடிவடையும் கண்டிகை-கல்வாய் சாலை 10 கிலோ மீட்டர் கொண்டதாகும். இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கீரப்பாக்கத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சிமெண்ட் கலவை லாரி ஒன்று நேற்று காலை வந்து லோடு இறக்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
அப்போது, கீரப்பாக்கத்தில் இருந்து கண்டிகை நோக்கி செல்லும்போது இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் அருகில் உள்ள சாலை வளைவில் அமைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகைகளை பார்த்துக்கொண்டே லாரியை ஓட்டி சென்ற டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சிமெண்ட் கலவை லாரி சாலை ஓரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து லாரி ஈடுபாடுகளில் சிக்கி கொண்ட லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர். இதனால், லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலை குப்புறக்கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரியை கிரேன் மூலம் மீட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.