Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பலமுறை கண்டித்தும் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பேசியதால் குழந்தைகளை கடலில் வீசி கொன்றேன்

மரக்காணம், ஜூலை 14: மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33). இவரது மனைவி கீர்த்தி என்ற கவுசல்யா (26). இந்த தம்பதிக்கு ஜோவிதா (4) மற்றும் 18 மாத சஸ்மிதா என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆனந்தவேல் கடந்த 11ம் தேதி மதியம் வீட்டிலிருந்த தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கூனிமேடு கடற்கரையில் சஸ்மிதாவின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுபோல் ஜோவிதாவின் உடல் அனுமந்தைகுப்பம் கடற்கரையோரம் கரை ஒதுங்கியது. மரக்காணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தைகளின் தந்தை ஆனந்தவேலு எங்கு சென்றார் என தெரியாமல் இருந்த நிலையில், செல்போன் டவர் மூலம் அவரை தேடி வந்ததை அறிந்த ஆனந்தவேலு நேற்று முன்தினம் மதியம் மரக்காணம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

மேலும் போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுக்கு முன் காலாப்பட்டு பகுதி சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனது மனைவி எனக்கு தெரியாமல் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். இதனை தெரிந்த நான் அவரை பலமுறை கண்டித்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என கூறினேன். ஆனால் கவுசல்யா திருந்தாமல் தொடர்ந்து பேசி வந்தார்.

இதனால் எனக்கும் கவுசல்யாவுக்கும் பலமுறை பிரச்சனை ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் கடந்த 10ம் தேதி எனது மனைவி கவுசல்யாவை புதுவை மாநில போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்ததை கேட்டு வேதனை அடைந்தேன்.இதனால் எனது 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 11ம் தேதி மதியம் எனது 2 குழந்தைகளையும் வீட்டில் இருந்து மரக்காணம் அருகே புதுக்குப்பம் கீழ்புத்துப்பட்டு கடற்கரைக்கு அழைத்து சென்று கடலில் வீசி கொலை செய்துவிட்டு நான் காலாப்பட்டில் வசித்த வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்.

அப்போது உறவினர்கள் என்னை தடுத்து காப்பாற்றி விட்டனர். ஆனாலும் எனது குழந்தைகளை கொன்று விட்டு என்னால் நிம்மதியாக வாழ முடியாது, என்றார். இதையடுத்து போலீசார் பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் புதுவை மாநிலத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அனுப்பி விடுவதாகவும், புதுவை மாநில போலீசாரின் விசாரணையில் கூடுதல் தகவல் தெரியவரலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.