பெரியகுளம், டிச. 2: வடகிழக்கு பருவமழைக் காலம் மற்றும் அதிக காற்றுடன் கூடிய கனமழை காலங்களில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விபரம் வருமாறு: வாழைத் தோட்டங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை முழுமைாக அகற்றிவிட வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும்.
வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். இதர பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்ற பயிர்களை பொறுத்தவரை காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்யவதோடு, தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் தூர் பகுதிகளில் நனையும்படி தெளிக்க வேண்டும். பின்னர் வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.