Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்வயல்களில் களர் நிலம், பாசி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள்

தா.பழூர் மே 15: தா.பழூர் அருகே நெல்வயல்களில் களர் நிலம், பாசி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி பல்வேறு பயிர் பருவங்களில் உள்ளது.குறிப்பாக நடவு செய்து 30 நாட்களான வயல்களில் பாசி படர்ந்து பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி குறைந்து கருகிய நிலையில் காணப்படுகிறது.

இது குறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவரும், முனைவருமான கோ.அழகுகண்ணன், மைய உழவியல் தொழில்நுட்பவல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் தா.பழூர் ஒன்றிய கிராம பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர். அப்போது, கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி கோ.அழகுகண்ணன் கூறுகையில், ஆழ்துளை கிணற்று நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பால் வயல்களில் பாசி படர்ந்து காணப்படுகிறது. எனவே இதனை மேலாண்மை செய்ய ஆரம்ப காலகட்டத்தில் களர் மற்றும் உவர் நிலங்களில் அவசியம் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து மண்ணை சீர்திருத்தம் செய்து கார அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் அடி உரமாக பாஸ்பேட் உரங்களான டிஏபி, கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால், பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படுவதால் பாஸ்பேட் உரங்களின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு ஒரு கிலோ இடுதல் அவசியமாகும். மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடும்பொழுது நேரடி உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை மூன்று பிரிவுகளாக தர வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக பாய்ச்சுதல் அவசியமாகும். உப்பு நிறைந்த ஆழ் குழாய் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது வயல்களில் குட்டை அமைத்து நீரைத் தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கள் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும். மேற்கூறிய அத்தியாவசிய இடுபொருட்களை சோழமாதேவி கிராமத்தில் உள்ள கிரீடு வேளாண்மை அறிவியல் மையத்தை அனுகி பெறுவதுடன் இந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.