Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நிலத்தடி நீர் அதிகரிப்பு, வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ₹120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூலை 10: சென்னையில் நிலத்தடி நீர் அதிகரிப்பு, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் 12 ஏரிகள் ₹120 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரிகளை பராமரித்து, பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 12 ஏரிகள் ₹120 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தில், பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் உள்ளிட்ட 12 ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரிகள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன. எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இதற்காக 10 ஆலோசகர்கள் நியமித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஏரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக அமைய உள்ளது. நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற உள்ளது.

குறிப்பாக ஏரிகளை நீலம் மற்றும் பச்சை என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக மேற்கொள்ளப்படும் சீரமைப்பால் ஏரிகள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமையும். மேலும் மறுசீரமைக்கப்படும் ஏரிகளால் திறந்த நிலங்களாகவும், ஆக்கரமிப்புகள் இல்லாதவாறு அமைகிறது. என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி கூறியதாவது: நிலத்தடி நீர் அதிகரிப்பு, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் அடுத்த 2 ஆண்டுக்குள் ஏரிகள் மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்படும். இந்த ஏரிகளில் தண்ணீரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் ஆகியோர் கைகோர்த்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் ஏரிகளை பொறுத்தவரை நகரின் உள்கட்டமைப்பில் முக்கியமான ஒன்று. இதனால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. மழை, வெள்ள காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும். நகரம் வெப்பம் அடையாமல் தடுக்க, பருவநிலை மாற்ற சிக்கல்களை சமாளிக்கப்படும். இதற்காக, முதல்கட்டமாக சென்னையில் உள்ள 12 ஏரிகளில் ₹120 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக ஏரிகளை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, ஏரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குப்பை ஏரி நீரில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகாயத் தாமரைகள் தூர்வாரப்படும். நாட்டு தாவரங்கள் வளர்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏரிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, இருக்கை வசதிகள், இயற்கை விளக்க மையங்கள், பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திட்ட பணி விவரங்கள்

♦ அயனம்பாக்கம் ஏரி 85 ஹெக்டருக்கு மேல் பரப்பளவுகொண்டது. 290 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும். அந்த பகுதியில் நிலத்தடி நீரை கொடுப்பத்தில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரியை சுற்றி நடைப்பாதை, படகு குழாம், நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட உள்ளது.

♦ ரெட்டேரியை நீர்வளத்துறை பராமரிக்கிறது. வறட்சியாக இருந்த காலத்திலும் இந்த ஏரி தாகத்தை தணித்து இருக்கிறது. ஆனால் மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த ஏரி மறுசீரமைக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் அதிகரிப்பு, இணைப்பு பாலம், ஏரியை ஒட்டி திறந்த வெளி பூங்கா அமைக்கப்படும்.

♦ வேளச்சேரி ஏரிக ஆரம்பத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போத தண்ணீர் பரப்பளவு 80.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியில் நீர் கொள்ளளவை அதிகரித்தல், போட் ஜெட், இயற்கை பூங்கா போன்றவை அமைக்கப்பட உள்ளது.

♦ கொளத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இருக்கைகள், பொழுதுபோக்கு பகுதிகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டை அமைக்கப்படும்.

♦ ஆதம்பாக்கம் ஏரியில் ஏற்படும் தொடர் வெள்ளப்பெருக்கு மற்றும் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். மேலும் விளையாட்டு பகுதிகள், மக்கள் ஒற்றுக்கூடும் பகுதிகள் அமைக்கப்பட உள்ளது.