மதுரை, மே 8: நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், அதுகுறித்து புகார் அளிக்க முன்வர வேண்டுமென பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை எஸ்எஸ் காலனி, நாவலர் நகர் முதல் தெருவில் செயல்பட்டு வந்த ‘ரைசர் பசுமை டெவலப்மென்ட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தவணை முறையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியுள்ளது. மேலும், அதற்கு ஈடாக வீட்டடி மனைகள் வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவில் நிறுவனத்தின் இயக்குநர்களான ராஜேந்திரன், சிவகுமார், ராமச்சந்திரன், சுந்தரம், ஜான், குணசீலன், ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தபால்தந்தி நகர் விரிவாக்கம், சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணம் கட்டிய ரசீது மற்றும் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


