கோவை, ஜூலை 10: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் குழந்தைகள் அமைப்பான சிஐஓ தேசிய அளவில் மண்ணிலே கரங்கள் இந்தியாவோடு இதயங்கள்” என்ற மைய கருத்தில் சுற்றுச்சூழலை மையப்படுத்தி பிரசாரம் செய்கிறது. குழந்தைகளால் நடத்தப்படும் இந்த அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு கோவையில் நேற்று நடைபெற்றது. அப்போது, கோவை மாவட்ட தலைவர் நபீளா சுரம் கூறியதாவது:
சிஐஓ என்பது 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஓர் குழந்தைகள் அமைப்பு. வரலாறு, நல்லொழுக்க போதனைகள், திறமைகளை வளர்க்கும் போட்டிகள் என குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே இதன் நோக்கம். குழந்தைகளை நாளைய தலைவர்களாக மாற்றுகிறது சிஐஓ. இன்று முக்கியமான பிரச்னையை குழந்தைகளான நாங்கள் கையில் எடுத்துள்ளோம். எங்கள் தலைமுறைக்கு நிழலும், தண்ணீரும் கிடைக்க வேண்டும். இதற்கு மரங்கள் மிகவும் அவசியம்.
மரங்கள் நமக்கு ஆக்ஸிஜன் தருகின்றன. இது, மனிதனின் வாழ்வுக்கு முதன்மையானது. இன்றைய சூழ்நிலையில் காடுகள் நாசம், மழை குறைபாடு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் மனிதனால் வந்தவை. இதை சமாளிக்க ஒரே தீர்வு மரம் வளர்ப்பது. எனவே ‘மண்ணிலே கரங்கள்! இந்தியாவோடு இதயங்கள்!’’ என்னும் இந்த பிரசாரத்தை கையில் எடுத்துள்ளோம். நாடு முழுவதும் நாங்கள் 10 லட்சம் மரங்கன்றுகளை நட போகிறோம். மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாதம் இறுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளேம். இவ்வாறு அவர் கூறினார்.


