நாகப்பட்டினம்,நவ.6: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவிலான சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இது நாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் அல்லது புதுப்பிக்க வேண்டியவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (6ம் தேதி) நடைபெறுகிறது. வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நாளை (7ம் தேதி) தொடங்கி 9ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
திருமருகல் வட்டார சுகாதார நிலையத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையிலும், கீழ்வேளுர் அரசு மருத்துவமனையில் 15ம் தேதியும், தேவூர் வட்டார சுகாதார நிலையத்தில் 16 மற்றும் 17ம் தேதியும் நடைபெறுகிறது. திருப்பூண்டி வட்டார சுகாதார நிலையத்தில் 20ம் தேதியும், திருக்குவளை அரசு மருத்துவமனையில் 21ம் தேதியும், நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 22ம் தேதியும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் தற்போதைய புகைப்படம்- 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முன்னதாக வைத்தியம் செய்திருப்பின் அதற்கான ஆவணங்களுடன் நேரில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


