Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8 வட்டாரங்களில் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் பயனடையுமாறு கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஏப். 24: நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8 வட்டாரங்களில் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதில் விவசாயிகள் பயனடையுமாறும் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நவரைப் பருவத்தில் 23,939 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் வீதம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 634 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரவு எதிர்பார்க்கப்பட்டு முதற்கட்டமாக அம்பத்தூர், பூந்தமல்லி, கடம்பத்தூர், திருவள்ளூர், திருவாலங்காடு திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே. பேட்டை ஆகிய 8 வட்டாரங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 34 இடங்களிலும், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 4 இடங்களிலும் என மொத்தம் 38 இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு கிளை மேலாளர், நுகர்வோர் கூட்டமைப்புக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிட்டதையடுத்து கடம்பத்தூர் வட்டாரத்தில் நெல் கொள்முதல் பணி முதலில் தொடங்கப்பட்டு இதுவரை 8,726 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மேலும் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல் ₹2,310க்கும், பொது ரக நெல் ₹2,265க்கும் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கடந்த சொர்ணவாரி மற்றும் சம்பா பருவங்களில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர்களை நடப்பு பருவத்திலும் தொடர்ந்து அதே இடத்தில் பணியமர்த்தாமல் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணி மாற்றம் செய்து பணியமர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கிளை மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எந்த ஒரு விவசாயியும் தங்கள் அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கினால் அந்த விவசாயிக்கு 2 வருடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுத்து அரசு வழங்கும் எந்த ஒரு மானிய திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது என்பதனையும், தலையீடு செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வலைதளத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்மணிகளை எவ்வித சிரமமுமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறுமாறும், வெளி வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோருக்கு இடமளிக்காமல் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.