Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தோகைமலை அருகே கோடைநெல் அறுவடை தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து பணிகள் மும்முரம்

தோகைமலை, ஜூன் 24: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா மற்றும் கோடை நெல் சாகுபடியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து அமைத்து வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டு சம்பா அறுவடையை தொடர்ந்து தற்போது கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக கடந்த வாரம் முதல் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த கோடை நெல்லை கழுகூர் ஊராட்சி அ.உடையாப்பட்டி மேற்கு மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து விவசாயிகள் பதிவு செய்து வந்தனர்.

இந்த கொள்முதல் நிலையத்தில் இரண்டு ரகங்களாக நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில் அரசு நிர்ணய விலையாக சன்ன ரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ 24 ரூபாய் 50 பைசாவிற்கும், மோட்டா (பெரியது கிரேடு சி) ரகம் ஒரு கிலோ 24 ரூபாய் 05 பைசாவிற்கும் பெறப்படுகிறது. நெல்லின் ஈரப்பதம் 15 முதல் 17 (மாக்ஷர்) அளவில், நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கனிமம் தரம்பார்த்து எடுக்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் சிகப்பு நிறம் கொண்ட சணலால் 14 சுத்து தையல் அமைக்கப்படுகிறது.

இங்கு விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பதிவுகள் வரிசைப்படி கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பதிவு செய்வதற்கு விஏஓ சான்று பெற்ற அடங்கல், விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் சாக்கில் நெல்லை பிடிப்பதால் சாக்குடன் நெல்லை கொண்டு வர தேவையில்லை. குவியலாக கொண்டு வந்தால் போதும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு 3 நாட்களில் தங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையமானது அறுவடை காலம் முடியும் வரை செயல்படும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல் அய்யர்மலையில் உள்ள தமிழ்நாடு அரசின் தானியக்கிடங்கில் சேமிக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொள்முதல் நிலையத்தில் இதுவரை 140 விவசாயிகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர் என்றும், முன்பதிவு செய்த விவசாயிகளில் இதுவரை 70 விவசாயிகளின் நெல்லை ஏற்றுமதி செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர். இதேபோல் சுமார் 10 ஆயிரம் மூட்டைகள் அதாவது சுமார் 500 டன் வரை ஏற்றுமதி செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அறுவடைகாலம் முடியும் வரை செயல்படும் என்பதால் அறுவடை செய்யும் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறும், மழை பெய்தால் அதற்கான போதுமான தார்பாய்கள் தயாராக கையிருப்புகள் உள்ளதாகவும், மூட்டைகள் அடுக்கி வைத்திருக்க போதுமான அட்டி கட்டாயங்களும் தயாராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையம் கழுகூர் உடையாப்பட்டியில் அமைத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.