Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் தொழுநோய் ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தொழுநோயை முற்றிலுமாக ஒழிக்கவும், தேசிய தொழு நோய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பு ஆண்டில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் தொழுநோய் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் உறுதிமொழியான தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்பதனை நான் அறிவேன்.

உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன். அவர்களை அன்பாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன்.

தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை அண்டை அயலாருக்குத் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன். தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.

ஒன்றிணைவோம், தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம், தவறான புரிதல் அகற்றுவோம், நோய் பாதிப்புள்ளோர் அனைவரையும் குணப்படுத்துவோம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலரகளும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.மணிவண்ணன், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) சுதாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.