ஆரணி, ஜூலை 11: ஆரணி டவுன் புதுகாமூர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(42), இவர், ராட்டிணமங்கலம் மார்டன் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது ரைஸ்மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளிகள், ரைஸ்மில் பின்புரம் உள்ள அறையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அருண்குமார் வழக்கம்போல், ரைஸ்மில்லுக்கு வந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மில்லில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பிட்டுகுமார் அவருடன் வேலை செய்யும் காலுகுமார்(21), இருவருக்கும் இரவு உணவு சாப்பிடும் போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த காலுகுமார் அருகில் இருந்த கத்தியை எடுத்து பிட்டுகுமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த ரைஸ்மில் உரிமையாளர் அருண்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பிட்டுகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் நேற்று அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக இருந்த காலுகுமார்(21), போலீசார் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


