Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிலாளர்கள் வேலை இழப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பயிர்களுக்கு தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் அதிக வருவாய் பெறலாம்

திருவையாறு, ஜூன் 9: விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க பயிர்களுக்கு தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் அதிக வருவாய் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் லதா விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை: தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், தேவைக்கு அதிகமான அளவில் இடப்படும் ரசாயன உரங்கள் ஆகியவை சுற்றுச்சூழலை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வரும் காலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த பழக வேண்டும். வேம்பு, நொச்சி, புங்கம், எருக்கு ஆகிய பயிர்கள் பூச்சிகளை கட்டுப்படுத்த பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வேம்பின் பங்கு அதிகம். வேம்பு பொருட்கள் பூச்சி விரட்டியாகவும், வேம்பு பொருட்களை பயன்படுத்திய இலைகளை உண்ணும் பூச்சிகளுக்கு மலட்டுத் தன்மை உண்டாகும். எனவே அடுத்த தலைமுறை பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வேப்பங்கொட்டை சாறு, வேப்ப இலை, வேப்ப எண்ணெய் ஆகிய வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேப்பங்கொட்டை 10 கிலோவை நன்றாக இடித்து தூளாக்கி துணியில் கட்டி 20 லிட்டர் நீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இம்மூட்டையை பிழிந்து வடிகட்டி ஒட்டும் திரவம் கலந்து கரைத்து 180 லிட்டர் நீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணெய் பயன்படுத்தினால் 6 லிட்டர் வேப்ப எண்ணையை 200 லிட்டர் நீருடன் கலந்து ஒரு ஏக்கர் பயிருக்கு தெளிக்கலாம். வேப்பம் புண்ணாக்கும் 10 சதக் கரைசலாக , 20 கிலோ புண்ணாக்கை தூளாக்கி துணி மூட்டையில் கட்டி 8 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 180 லிட்டர் நீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.

விதைகளை சேமிக்கவும் வேப்ப எண்ணெய் மற்றும் வேப்ப இலை பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு, புண்ணாக்கு 60 கிலோவை ஒரு ஏக்கர் நிலத்தில் இட்டால் மண் மூலம் பரவும் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தலாம். நொச்சி மற்றும் புங்க இலைகளை, விதைகளை சேமிக்கும் இடங்களில் பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.10 கிலோ நொச்சி இலைகளை இடித்து சாறாக்கி அதனை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, அசுவினி மற்றும் தத்துப்பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ புங்கம் இலை அல்லது 100 கிராம் புங்கம் புண்ணாக்கு அல்லது 300 மிலி புங்கம் எண்ணெய் இவற்றுடன் 3 லிட்டர் கோமியத்தை கலந்து ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் 200 லிட்டர் தண்ணீரில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் .

இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் குறையும். இந்த தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்பொழுது நாம் சேதம் உண்டாக்கும், தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே அழிக்கிறோம். நன்மை செய்யும் பூச்சிகள் காப்பாற்றப்படுகிறது. தற்பொழுது வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சார்ந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ள கிராமங்களில் விவசாயிகள் குழு அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையை மனதில் நிறுத்தி குறைந்த செலவில் தயாராகும் தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருவாயை பெருக்கி பயன் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.