Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது 8 சவரன் நகைகள் பறிமுதல் ஆன்லைனில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் கடன்

சேத்துப்பட்டு, ஜூன் 6: ஆன்லைனில் ரூ.15 லட்சத்தை இழந்ததால் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, ஞானோதயம் கிராமத்தை சேர்ந்தவர் ரீட்டா(65). இவர் தனது மகன் ஜான் சத்தியசீலன்(45) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் பைக்கில் சேத்துப்பட்டு நோக்கி வந்தார். ருவண்ணாமலை பைபாஸ் அருகே பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று கலசப்பாக்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வாலிபர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததை பார்த்து நிறுத்தி விசாரித்தனர். மேலும், அவரது பைக் பலமுறை செயின் பறிப்பு சம்பவங்களின்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, மாம்பாக்கம் கிராமத்தை சேரந்தவர் மாயன் மகன் சீனிவாசன்(30) என்பது தெரியவந்தது.

அப்போது, அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவிக்கையில், பிடிபட்ட சீனிவாசன் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தாராம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கமும் இருந்துள்ளது. அதில், ரூ.15 லட்சத்தை இழந்த நிலையில் கடன் ரூ.19 லட்சமாக மாறியுள்ளது. இதனால் செய்வதறியாது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் தடுத்து காப்பாற்றி உள்ளனர்.

கடன் தொல்லை அதிகம் இருந்ததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து அனந்தபுரம், சாலவேடு, சேத்துப்பட்டு விழுப்புரம் ஆகிய இடங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை 8 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளார். தற்போது பிடிபட்ட நிலையில் அவரிடம் இருந்து 8 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.