Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு: தயார்நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல்

திருவள்ளூர், ஏப். 10: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பணிகளும் முடிந்து வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், பிரசித்தி பெற்ற கோயில்களில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு சந்தேகப்படியான பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? அல்லது சந்தேகப்படியான நபர்கள் யாரேனும் சுற்றித் திரிகிறார்களா? அல்லது வெடிகுண்டு போன்ற வெடிபொருட்களை யாரேனும் கொண்டு செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கம், பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 170 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 5 வாக்குச்சாவடி மையங்களில் 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 35 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதனையடுத்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான திருப்பாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமாலங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மேல் நல்லாத்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் வாக்குப்பதிவு மையம் அனைத்து பணிகளும் முடிவு பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வதஸ், திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி அழகேசன், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி, வட்டாட்சியர் வாசுதேவன், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

ஆந்திர எல்லையில் சோதனை தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக - ஆந்திர எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப்பகுதியான பள்ளிப்பட்டு - பாலாஜி கண்டிகை சாலையில் பேருந்துகள், கார்கள், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நேற்று முழுமையான சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.