Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தென்மேற்கு பருவமழை தொடர்பாக தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

கரூர், மே 20: தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில் தேவையான முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வருவாய் துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உள் வரத்து மற்றும் வெளிச்செல்லும் வாய்க்கால்கள் மற்றும் வரத்து கால்வாய்களும் தூர் வாரப்பட்டு மழை நீர் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்திடுமாறு பொதுப்பணித் (நீர்வளஆதாரம்) துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் அவசர தேவைகளுக்காக தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் செய்து முக்கியமான இடங்களில் சேமித்து வைத்து அது குறித்தான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடன் வழங்கிட வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள மீட்பு பணிக்கான உபகரணங்கள் வேலை செய்யும் நிலையில் உள்ளதா என சரிபார்த்து அதன் இருப்பினை IDRN (Indian Disaster Resource Network) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வட்டாட்சியர்களும் வட்ட அளவிலான துறை சார் கூட்டத்தை நடத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை பேரிடரின் காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொரிவிக்க வேண்டும். மழை மற்றும் காற்றில் சாலையில் மரங்கள் ஏதேனும் சாய்ந்தால் உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும். மேலும், தொடர் மழையால் சாலையின் பள்ளங்கள் ஏற்பட்ட நேர்ந்தால் தற்காலிகமாக உடனுக்குடன் பள்ளங்களை சீர்செய்து சாலை விபத்துகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் மற்றும் உள்ளாட்சி துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையினர் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை போதுய அளவு கையிருப்பு இருப்பதை மருத்துவத்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை பராமரிப்பு துறையினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் புல் ஆகியவை பாதுகாப்பான இடங்களில் இருப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கால்நடைகளுக்கு மழைகாலங்களில் பரவும் நோய்கள் குறித்தும் அவற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, தனி வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை கண்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.