கிருஷ்ணகிரி, அக்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே முகலூர் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா, கட்டிட மேஸ்திரி. இவரது மகன் அபினேஷ் (13), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 19ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த அபினேஷ், காஸ் அடுப்பை ஆன் செய்து பற்றவைக்க முயன்றான். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அடுப்பில் உள்ள ரெகுலேட்டரை மீண்டும் அணைக்காமல், அங்கிருந்து அபினேஷ் சென்றுவிட்டான்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த அபினேஷ், லைட்டரை கொண்டு மீண்டும் அடுப்பை பற்ற வைக்க முயன்றான். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டிருந்ததால் எதிர்பாராத விதமாக பயங்கரமாக தீப்பிடித்தது. இதில், அபினேஷிற்கு தீக்காயம் ஏற்பட்டது. அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து மீட்ட அக்கம்பக்கத்தினர், அபினேசை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அபினேஷ் உயிரிழந்தான். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.