Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9,314 விதை மாதிரிகள் ஆய்வு

திருவாரூர், மே 21: திருவாரூர் மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 314 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக விதைப்பரிசோதனை நிலைய அலுவலர் சிவ.வீரபாண்டியன் மற்றும் மூத்த வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் கிடைப்பதில் விதைப்பரிசோதனை நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. சான்று பெற்ற விதைகளாக திருவாரூர் பெரியமில் தெருவில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களை கொண்டு விதைகளின் தரங்களை துல்லியமாக பரிசோதித்து தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது.

இங்கு நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், மக்காச்சோளம், பருத்தி மற்றும் சோயாமொச்சை போன்ற பயிர்களின் விதை முளைப்புத்திறன் மற்றும் விதை தரத்தை நிர்ணயிக்கக்கூடிய இதர காரணிகளான ஈரப்பதம், புறத்தூய்மை கலவன்கள் பரிசோதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்ட்ட பிறகே சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வேளாண்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. கூடுதல் விளைச்சல் சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் விதையின் தேவை குறைவதுடன், உற்பத்திக்கான செலவு குறைக்கப்பட்டு கூடுதல் விளைச்சல் கிடைக்கப்பெறுகிறது. மேலும் தனியார் விதை உற்பத்தி செய்யும் சான்றளிக்கப்பட்ட விதைகளும், விதை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும்போது விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப்பரிசோதனையில் முளைப்புத்திறன் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

அதன்படி திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நெல் பயிரில் 6 ஆயிரத்து 590 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 433 மாதிரிகள் தரமற்றது எனவும், பயறு வகை பயிர்களில் ஆயிரத்து 805 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 22 மாதிரிகள் தரமற்றது எனவும், எண்ணெய் வித்துபயிர்களில் 250 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 80 மாதிரிகள் தரமற்றது எனவும், பருத்தியில் 468 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 38 மாதிரிகள் தரக்குறைவானது எனவும், காய்கறி பயிர்களில் 34 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 3 விதை மாதிரிகள் தரமற்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் எள், மக்காசோளம், நிலக்கடலை மற்றும் கீரை வகை விதைகள் என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 9 ஆயிரத்து 314 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்யலாம்.

மேலும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ.80 கட்டணத்தை நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலமாகவோ மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், 15-பி, பெரிய மில்தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம் என்றும் தஞ்சை மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் சிவவீரபாண்டியன் மற்றும் திருவாரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளனர்.