திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு இல்லை மின் விளக்கை சீரமைக்க வேண்டும்: முத்துப்பேட்டை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
முத்துப்பேட்டை, ஜூன் 16: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் கட்டிடத்தில் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள பஸ் நிழற்கட்டிடத்தில் உள்ள மின் விளக்குகள் சுமார் 2 மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் பாதுக்காப்பு இல்லாமல் பயணிகள் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகளும் அப்பகுதி மக்களும் பேரூராட்சி மின் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இந்த இடத்தில் குற்றசம்பவங்கள் நடக்கவும் வாய்புகள் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் நகரில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் இங்கு வந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பெண்களின் பாதுக்காப்பை கருதி பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருப்பக்கமும் உள்ள மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என பயணிக ளும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


