திருப்பரங்குன்றம், மே 14: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் வைகாசி வசந்த உற்சவம், மற்றும் வைகாசி விசாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வசந்த விழா நேற்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முன்னதாக சிறப்பு அலங்காரம், பூஜைகளை தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். விழாவையொட்டி கோயிலில் உள்ள வசந்த மண்டபம் தண்ணீர் நிரப்பி குளிர்விக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருள்வார். இதன்படி வரும் 21ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெறும்.
இதில் முக்கியமான வைகாசி விசாகம் மே 22ம் தேதி காலை துவங்கும் நிலையில், காலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும். இதையடுத்து 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தை மும்முறை வலம் வந்து விசாக குடிலில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அப்போது பல்லாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இதனைத்தொடர்ந்து மே 23ம் தேதி காலை 7 மணிக்கு திருப்பரங்குன்றம் தியாகராசர் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மொட்டையரசு திடலை அடைவார். பின்னர் அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையடுத்து இரவு பூப்பல்லக்கில் கோயிலை வந்தடைவார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சோலைமலை முருகன் கோயிலிலும் சிறப்பான தொடக்கம்
அழகர்கோயில் மலைமேல் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோயிலிலும் வைகாசி விசாக விழா நேற்று சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது. மூலவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் மாலையில் மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 22ம் தேதி வைகாசி வசந்த உற்சவ திருவிழா நடைபெறுகிறது.