திருத்தணி, மார்ச் 5: திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 2ம் நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். தீபாராதனை பூஜைகளை தொடர்ந்து சாமி கோயில் மாடவீதியுலா நடைபெற்றது. மாட வீதியில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரவு சாமி பூத வாகன சேவை நடைபெற்றது. மாசி பெருவிழா மற்றும் முருகரை தரிசனம் செய்ய உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று பக்தர்கள் அதிகளவில் மலைக் கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
+
Advertisement