Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எச்சூர் லிங்காபுரத்தில் பாசி, தூசி, மண் கலந்து வரும் குடிநீர்

மாமல்லபுரம், ஜூலை 15: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்ற ஒன்றியம், எச்சூர் ஊராட்சியில் எச்சூர், லிங்காபுரம் பகுதியில் 130க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஏரிக்கரைக்கு நடுவில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, தெருவில் உள்ள குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, ஓராண்டுக்கு மேலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமலும், குடிநீருக்காக பயன்படும் கிணற்றை சுத்தம் செய்யாமல் பாசி மற்றும் தூசி துகள்கள் படிந்து அலங்கோலமாக காணப்படுகிறது.

மேலும், அந்த குடிநீர் கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதோடு, கிணற்றுக்கு செல்ல இதுவரை பாதை அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த, பாசி படிந்த கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி வினியோகிக்கும் போது அதிகளவில் பாசி மற்றும் தூசி துகள்கள் கலந்து லேசான பச்சை நிறத்தில் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்த குடிநீரை குடிக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி முதியவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த பாசி கலந்து வரும் குடிநீரை குடிக்கும் பெண்களுக்கு சிறுநீரக தொற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுத்தும், பலமுறை போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி தானே என்று அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் பகிரங்க குற்றச் சாட்டை முன் வைக்கின்றனர். கடந்த கிராம சபை கூட்டத்தின் போது கூட இந்த பிரச்னை சம்பந்தமாக ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் மனு கொடுத்தும் இதுநாள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட கலெக்டர் சினேகா உடனடியாக தலையிட்டு, எச்சூர் ஊராட்சியில் குடிநீர் கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கவும், குடிநீர் கிணற்றுக்கு பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் என நேரில் சென்று மனு கொடுத்தும், பல முறை போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆதிதிராவிடர் பகுதி மக்களை ஓராண்டாக அலைகழிக்கும் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர், எச்சூர் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த ஓராண்டாக குடிநீரில் பாசி கலந்து வருகிறது. கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என மனு கொடுத்து வருகிறோம். நாங்கள் ஆதிதிராவிடர் மக்கள் என்பதால் இது போன்ற பிரச்னைகளை தட்டி கழித்து நாளை அல்லது நாளை மறுநாள் சரி செய்கிறோம் என அதிகாரிகள் அலட்சிய படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் மக்கள் தானே என்ன செய்ய போகிறார்கள் என்று அதிகாரிகள் பயப்படுவதில்லை. இன்னும் ஓரிரு நாளில் கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை என்றால், ஊர் மக்களை திரட்டி திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் சாலையை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.