Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் மாணவர்கள் குளிக்க கூடாது: கலெக்டர் அறிவுறுத்தல்

திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போக்காக ஏரி, ஆறு, குளம், குட்டை, அணை, கல் குவாரிகள், தேங்கிய நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் குளிக்க, துணி துவைக்க செல்லும் போது நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், 2023ம் ஆண்டு 19 பேர், 2024ம் ஆண்டு 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே, நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு அரசு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள், இறப்புகள் பற்றிய விழிப்புணர்வை வருவாய் துறையினர் மூலமாக பொதுமக்களிடம் பொதுவான எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க, அதற்கான எச்சரிக்கை விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் அமைக்க வேண்டும். அதில், தீயணைப்பு மற்றும் காவல் துறையினரை அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும். கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு கடல், அணைகள், நீரோட்டம் உள்ள ஆற்று பகுதிகளில் குளிக்கும் போது பாதுகாப்புடன் நீராட அப்பகுதியின் ஆழம் குறித்து, பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள கல்குவாரிகள், பாறை குழிகள் மற்றும் நீர்நிலைகளில் குளிப்பதனால் ஏற்படும் ஆபத்துகளை ஊராட்சி நிர்வாகம் மூலமாக அப்பகுதிகளில் கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீரில் மூழ்கி 2 நபர்கள் இறந்துள்ளனர். மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அவசர உதவிக்கு தீயணைப்பு துறையினருக்கு, காவல் துறையினருக்கு, மருத்துவ துறையினருக்கு 24 மணிநேரமும் இயங்க கூடிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தேவையற்ற நடமாட்டத்தை தடுத்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.