Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

தாம்பரம், நவ.6: சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், தாம்பரம் வழியாக விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுவதால் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை, மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தாம்பரம் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ், தாம்பரம் காவல் நிலைய போலீசார், மோப்ப நாய் டயானா மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள், ரயில்கள், ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகங்கள், டிக்கெட் கவுன்டர்கள், கடைகள் மற்றும் பயணிகளின் உடமைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது வெறும் புரளி என தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர், தனது பெயர் குமார் என தெரிவித்ததும், மின்சார ரயிலில் பயணம் செய்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த மர்ம நபர்கள் இருவர் இந்தியில் தாம்பரம் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசியதாக தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்து அழைப்பு எங்கிருந்து வந்தது, அந்த நபர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.