தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு: 45,387 பேர் எழுதினர் 12,740 பேர் ஆப்சென்ட்
திருவள்ளூர், ஜூன் 10: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 194 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்காக மாவட்டத்தில் 58,127 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 45,387 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர். மேலும் விண்ணப்பித்திருந்த 12,740 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் திருவள்ளூர் நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, காக்களூர் கலவல கண்ணன் செட்டி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது திருவள்ளூர் வட்டாட்சியர் செ.வாசுதேவன் உள்பட பலர் உடனிருந்தனர். இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர்கள் அளவிலான 9 நிலையான கண்காணிப்பு குழுவும், வட்டாட்சியர்கள் அளவிலான 9 பறக்கும் படையினர் குழுவும், 37 நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதும் பணியினை கண்காணித்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தேர்வு எழுத வருபவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது.