மேட்டூர், ஜூலை 25: மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணை பாதுகாப்பு அமைப்பின் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்பு பணி, சுரங்க கால்வாய் சீரமைப்பு பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வலுப் படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள், சுமார் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இபணிகளை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில அணை பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில், வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10பேர் கொண்ட குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் சுமார் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வானது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆய்வு என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையின் வலது கரை மற்றும் இடது கரை, உபரி நீர் போக்கி மதகுகள் அணையின் உட்பகுதியில் உள்ள ஆய்வு சுரங்கம், அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீரின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், அணையின் உறுதித்தன்மை, அணையின் பாதுகாப்பு குறித்து மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக அரசு மற்றும் நீர்வளத்துறைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
தொடர்ந்து அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மைக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது நீர்வளத்துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் உபகோட்ட செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


