தமிழில் பக்தி பாடல்கள் பாடிய ஜெர்மன் நாட்டு பெண் பக்தர்கள் கலசபாக்கம் அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில்
கலசபாக்கம், நவ.12: கலசபாக்கம் அருகே பிரசித்தி பெற்ற எலத்தூர் மோட்டூர் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தமிழில் பக்தி பாடல்களை பாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற கந்த சஷ்டி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 3 பெண் பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் குருக்கள் சந்தோஷ், 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி முருகர் பக்தி பாடல்களை பாடும்போது, அவரை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர். இதனை அங்கிருந்த பக்தர்கள் வியந்து ரசித்தனர்.